×

பணகுடி கோயில் நிலங்களை ஆக்கிரமித்து பாதை அமைத்த காற்றாலை நிறுவனங்கள்

பணகுடி, மார்ச் 2: பணகுடியில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் பாதை அமைத்துள்ளதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணகுடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராமலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர்  நிலங்கள் உள்ளன. இதில் தற்போது பணகுடி, சொக்கலிங்கபுரம், சமாதானபுரம், கோவில்விளை, பெருங்குடி, காவல்கிணறு, பாம்பன்குளம், ரோஸ்மியாபுரம், சிவகாமியாபுரம் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலமாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும், தரிசு நிலங்களாகவும் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கில் வருமானம் வர வேண்டிய நிலையில், தற்போது நெல் மூட்டைகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.

பணகுடி பஸ் நிலைய கீழ்புறமுள்ள கடைகளும், வெளியூரை சேர்ந்தவர்களுக்கு தரப்பட்டு உள்ளன. மேலும் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள், பெரிய அளவில் புதுப்பிக்கப்படுகின்றன. இதனிடையே கோயில் நிலத்தை சுற்றியுள்ள இடங்களில் காற்றாலை நிறுவனங்கள், பாதையை உருவாக்கி வாகனங்களை கொண்டு சென்று வருகின்றன. இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடமோ, இந்துசமய அறநிலையத்துறையிலோ அனுமதி பெறப்படவில்லை.
இதுகுறித்து பணகுடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பாம்பன்குளம், தளவாய்புரத்தில் கோயில் நிலம் வழியாக காற்றாலை நிறுவனங்களுக்கு பாதை கொடுத்தும், கம்பங்கள் நடவும் அனுமதி கொடுத்து பல லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள், ஒப்பந்தப்படி நெல் தர மறுக்கின்றனர். எனவே உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோயில் நிலத்தை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Tags : Windmill companies ,lands ,Pankudy Temple ,
× RELATED திருமணிமாடக் கோயில் நாராயணன்