×

மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து திருவேங்கடத்தில் ஆர்ப்பாட்டம்

திருவேங்கடம், மார்ச் 2: மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து திருவேங்கடத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருவேங்கடம் மெயின் பஜாரில் காந்தி மண்டபம் முன் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் திருவேங்கடம் வட்டாரச் செயலாளர் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் ராஜகனி, ஜான்பவுல்ராஜ்  முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் சுப்பையா, ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளர் இசக்கித்துரை, மாநிலக்குழு உறுப்பினர் கணேசன், தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் இருதய செல்வராஜ், வட்டாரச் செயலாளர் ராஜேந்திரன்  சிறப்புரையாற்றினர்.

இதில், அரசு மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.  படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். திருவேங்கடம் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்பட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா காலங்களில் மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் நடைபெறும் ஊழல் முறைகேட்டை தடுத்து நிறுத்துவதோடு அதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.20  ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை குற்றவாளிகளையும், கொள்ளையர்களையும் பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்ட வேண்டும். குருவிகுளம் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நிலவும் முறைகேடு தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வுநடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏஐஒய்எப் மாவட்ட துணைச்செயலாளர் சிங்கராஜ் நன்றி கூறினார்.

Tags : Protests ,Thiruvenkadam ,
× RELATED கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் லாரி உரிமையாளர் பலி