×

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

திருவண்ணாமலை, மார்ச் 2: திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது குறித்து, புகார் அளிக்க வந்த உறவினர்களை, போலீசார் 5 மணி நேரம் அலைக்கழித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவர் நேற்று தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், ஏரி பகுதிக்கு சென்று விளையாடலாம் என கூறி சிறுமியை அழைத்து சென்றாராம். அங்கு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அழுதபடி தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சம்பந்தப்பட்ட சிறுவனை பிடித்து தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், புகாரை ஏற்காமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என சிறுமியின் உறவினர்களிடம் தெரிவித்தாராம். ஆனால் உறவினர்கள், புகாரை பெற்றுக் கொண்டு சிறுவனை கைது செய்ய வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் புகாரை ஏற்கவில்லை.

மதியம் 2 மணியளவில் இருந்து காத்திருந்தும் போலீசார் கண்டு கொள்ளாததால் சிறுமியின் உறவினர்கள் வேதனை அடைந்தனர். அதன் பின்னர், மாலை 6 மணியளவில் சிறுமியின் உறவினர்களை, தச்சம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால், தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் பாரதி, இந்த வழக்கை விசாரிக்க வரவழைக்கப்பட்டார். ஆனால், இரவு 7 மணி வரையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், புகார் மனுவை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது குறித்து புகார் அளிக்க வந்தவர்களை மதியம் 2 மணியில் இருந்து இரவு 7 மணி வரையில் 5 மணி நேரம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(கேப்சன்) சிறுமிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வழக்குப்பதிய மறுத்ததாக போலீசாரை கண்டித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்.

Tags : Sexual harassment ,Thiruvannamalai ,
× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...