×

கிணற்றில் தள்ளி அண்ணி படுகொலை தொடர்பை துண்டித்ததால் மைத்துனன் வெறிச்செயல் ஜவ்வாதுமலை சம்பவத்தில் திடீர் திருப்பம்

போளூர், மார்ச் 2: ஜவ்வாதுமலையில் நடந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக ரகசிய தொடர்பை அண்ணி துண்டித்து கொண்டதால் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்த மைத்துனனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(45). இவர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேரம் கிடைக்கும்போது ஊருக்கு வந்து செல்வார். இவரது 2 பிள்ளைகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் மனைவி மின்னல்கொடி(40), தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 27ம் தேதி அங்குள்ள ஆன்டி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மின்னல் கொடி சடலமாக மிதந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜமனாமரத்தூர் போலீசார் முதலில் தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மின்னல்கொடி கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதனால் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போளூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார், ஜமனாமரத்துர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு ஏட்டு விஜய், ஆகியோர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதில், கணவர் அண்ணாமலையின் தம்பி சவுந்தராஜன்(30) என்பவருக்கும் மின்னல்கொடிக்கும் இடையே ரகசிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சவுந்தராஜனுக்கும், அவரது மனைவி கண்ணகிக்கும் குடும்ப சண்டை நடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணகி மின்னல்கொடியை எச்சரித்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த மின்னல்கொடி கடந்த 6 மாதங்களாக ரகசிய தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் மைத்துனன் சவுந்தராஜன் வேதனையின் உச்சத்திற்கு சென்றார். அடிக்கடி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தும் மின்னல்கொடி மறுத்து வந்தார்.

இதனால் அவரை போட்டு தள்ளும் முடிவுக்கு வந்த மைத்துனன் சவுந்தராஜன் தனது உறவினர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு கடந்த 25ம் தேதி இரவு 8 மணிக்கு கீழ்விளாமூச்சி ஆண்டி என்பவர் நிலத்தின் அருகில் காத்து கொண்டிருந்தனர். அப்போது, தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு ஆன்டி நிலத்தின் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மின்னல்கொடியை வழிமடக்கி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். மறுப்பு தெரிவிக்கவே சவுந்தராஜன் மின்னல்கொடியை தாக்கி முதுகில் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி படுகொலை செய்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சவுந்தராஜனை ஜமுனாமரத்துர் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட உறவினர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சவுந்தராஜன் வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : incident ,brother-in-law ,Jawaharmalai ,murder ,well ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...