×

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் 86 மையங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

நாமக்கல், மார்ச் 2:  நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் இன்று துவங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை 197 பள்ளிகளைச் சேர்ந்த 20674 மாணவ, மாணவியர் எழுதுகிறார்கள். தமிழகத்தில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை 197 பள்ளிகளைச் சேர்ந்த 20674 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 86 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பணியில், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 1500 பேர் ஈடுபடுகிறார்கள். தேர்வில் மாணவ, மாணவியர் காப்பி அடிப்படை தடுக்க 120 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள் மாவட்டத்தில் உள்ள 10 மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை தனி வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள் கொண்டு செல்லப்படுகிறது.

தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதன்மை கண்காணிப்பாளர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பே அந்தந்த மையங்களுக்கு சென்று தேர்விற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். தேர்வு கண்காணிப்பு அலுவலராக இணை இயக்குனர் பொன்.குமார் நியமிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த வாரம் இரண்டு முறை நாமக்கல் வந்து தேர்வுக்கான  முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டமும் நடத்தினார். ஆனால், தற்போது இவர் திடீரென மாற்றப்பட்டு, தேர்வுத்துறை ஆலோசகர் வசுந்தராதேவி இம்மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை இயக்குனர் பொன்.குமார் தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்வு மையத்துக்குள் காலை 9.45 மணிக்கு மாணவ, மாணவியர் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக 10 மணிக்கு அறை கண்காணிப்பாளர்கள் மாணவ, மாணவியர் முன்னிலையில் வினாத்தாள் கட்டை பிரிப்பார்கள். அவை சரிபார்க்கப்பட்டு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும் விடைத்தாள் வழங்கப்படும். அதில், இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியரின் போட்டோ, தேர்வு எண் போன்றவற்றை சரிபார்த்து அறை கண்காணிப்பாளர்கள் கையெழுத்திடுவார்கள். அதற்கு பிறகு  10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். அதற்கு பிறகு விடைத்தாள் பெறப்பட்டு திருத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags : centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!