×

கீழக்கரை நகரின் மத்தியில் மின்கட்டணம் வசூல் மையம் அமைக்க வேண்டும்''

கீழக்கரை, மார்ச் 2: கீழக்கரை நகரின் மத்தியில் மின்சார கட்டணம் வசூல் செய்வதற்கு வசதியாக வசூல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலையாறு வண்ணான்துறை அருகில் உள்ள உபமின் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் 100 ரூபாய் மின்கட்டணம் செலுத்துவதற்கு ஆட்டோவிற்கு ரூ.150 கொடுத்து செல்ல வேண்டியுள்ளது.

ஆகவே ஏற்கனவே புதிய பஸ்ஸ்டாண்டில் உள்ள மீன் மார்க்கெட் அருகில் மின்கட்டணம் வசூல்மையம் அமைத்து போல் மீண்டும் மின்கட்டண வசூல் மையம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் டீம் ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் கூறுகையில், ‘கீழக்கரையில் மின்நுகர்வோர் மின்கட்டணம் செலுத்துவதற்கு 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியிருப்பதால் பல்வேறு சமூக நல அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்கெட் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் கடந்த 3 முன்று வருடங்களுக்கு முன்புவரை மின்கட்டண வசூல் மையம் அமைத்து வசூலித்து வந்தனர். இதனால் பொது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வந்தது.

தற்போது கடந்த மூன்று வருடங்களாக இந்த வசூல் மையத்தை மூடிவிட்டனர். இதனால் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அதாவது டூவீலர் வைத்திருப்பவர்கள் அதில் சென்று கட்டி விடுகின்றனர். பணம் படைத்தவர்கள் ஆட்டோவிற்கு ரூ.150 கொடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தி விடுகின்றனர். ஏழை எளிய மக்கள்தான் வெயில் காலத்தில் வெயில் என்று பாராமலும், மழைகலத்தில் மழை என்று பாராமலும் நடந்து சென்று மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றாலும் ரூ.10 முதல் 50 வரை கமிஷன் தரவேண்டியுள்ளது. ஆகவே கலெக்டர் இப்பகுதி ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் நகரின் முக்கிய பகுதியான புதிய பஸ் ஸ்டாண்டில் மின்கட்டணம் வசூல் மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : suburbs ,collection center ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்