×

போச்சம்பள்ளியில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிருக்கு ஊற்றும் அவலம்

போச்சம்பள்ளி, மார்ச் 2:போச்சம்பள்ளியில் கோடைக்கு முன்பே வறட்சி நிலவுவதால், டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் பயிருக்கு ஊற்றி வருகின்றனர். போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மழை பொய்த்ததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கடந்தாண்டு பருவ மழை கை கொடுத்தால் கிணறுகள், குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு போதிய நீராதாரம் கிடைத்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம் கரும்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டனர். இந்நிலையில், தற்போது கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருவதால் வறட்சி தொடங்கிவிட்டது. இதனால், ஏரி, கிணறுகள் வேகமாக வறண்டதால், விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.  நிலத்தில் உள்ள மரங்களை காப்பாற்ற டிராக்டர் தண்ணீரை ₹600க்கு விலை கொடுத்து வாங்கி கிணற்றில் விட்டு பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு கோடைக்கு முன்பே வறட்சி தொடங்கிவிட்டது. இதனால், காலம், காலமாக பாதுகாத்து வந்த மரங்கள் இந்த வறட்சிக்கு பட்டுப்போனால், இதே போல மரங்களை புதிதாக வைத்து காப்பாற்ற இன்னும் 10 வருடங்கள் ஆகும் என்பதால், டிராக்டர் தண்ணீரை ₹600க்கு விலை கொடுத்து வாங்கி மரங்களுக்கும், பயிர்களுக்கும் ஊற்றி வருகிறோம். இதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். இதனால், போச்சம்பள்ளி பகுதியில் டேங்கர் லாரி தண்ணீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Tags : Pochampalli ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...