×

பென்னாகரத்தில் திருப்பதி சென்றவர்களின் வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு

பென்னாகரம், மார்ச் 1:  திருப்பதி சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து பென்னாகரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி(44). ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரரான இவர், வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கடந்த 26ம் தேதி திருப்பதி சென்றுள்ளார்.  வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், மறுநாள்(27ம் தேதி) இரவு பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர், பீரோவில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ₹10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல், பருவதன அள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி(65), தனது குடும்பத்தினருடன் கடந்த 26ம் தேதி திருப்பதி சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், அங்கு பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். விசாரணையில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ₹1.30 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதேபோல், பென்னாகரம் அருகே முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரான முருகன்(31) என்பவர், கடந்த 3 தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த ₹29 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களுடன், குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த இரண்டு உண்டியல்களையும் எடுத்து சென்றுவிட்டனர். பென்னாகரத்தில்  தொடர் திருட்டு காரணமாக பொதுமக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : robberies ,houses ,Pennagaram ,Tirupati ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்