×

வறட்சி மிகுந்த பகுதிகளில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அத்துமீறல்

திருப்பூர், மார்ச் 1: திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மீது மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள மாவட்டங்களில் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் பூமியில் இருந்து தண்ணீர் எடுக்க கடந்த சில நாட்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தடை உத்தரவால், தமிழகத்தில் பல்வேறு பகுதியில் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மாநில முழுவதும், கடந்த மாதம் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால், பல்வேறு இடங்களில், கேன் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுபணித்துறை அனுமதியின்றி தன்னிச்சையாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனையில் ஈடுபடும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள் என பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது இதுவரை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுபணித்துறையினரால் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : wells ,canal wells ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...