×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மா.கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், மார்ச் 1:  திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், வடக்கு ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் துவங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வீடில்லா ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும். சேரிப் பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும், நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் பறக்கும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். நகரில் நடைபாதைகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

நகரில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர் உள்பட அனைத்து விதமான வசதிகளுடன் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இன்றி குப்பைகளை முறையாகப் பிரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 60 வார்டுகளிலும் மக்கும், மக்காத குப்பைகளுக்கான தொட்டிகள் அமைக்க வேண்டும். வீடுகளுக்கு சிறு அளவில் குப்பை சேகரிப்பு பக்கெட்டுகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Communist Party ,apartments ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...