×

எல்லமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் உச்ச நீதிமன்ற ரிசீவர் குழு தொழிலாளர்களை சந்திக்க முடிவு

கூடலூர், மார்ச் 1: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை தனியார் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பணப் பயன்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட  ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ரிசீவர் குழு வரும் 15ம் தேதி சம்பந்தப்பட்ட தோட்டத்தில் நேரடி கள ஆய்வு செய்து தொழிலாளர்களை சந்திக்கின்றனர்.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இதன் முதல் நிலை குழு கூட்டம் சென்னையில் 27ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் நீதிபதி சந்துரு தலைமையில் உச்ச நீதிமன்ற  ரிசீவர்கள் -  லாலுடிபன்சாலி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.    இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மேற்கண்ட ரிசீவர் குழுவினர் மேற்பார்வையில் தோட்டத்தை தொடர்ந்து நிர்வகித்து நடத்தவும்,  மேலாளர், கள அலுவலர், எழுத்தர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ளவும், வரும் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நேரடியாக தொழிலாளர்களை சந்தித்து ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணப் பயன்கள் கிடைக்காமல் உள்ளவர்களிடம் அதற்கான மனுக்களை பெறவும், தோட்டத்தை பரீட்சார்த்தமாக நடத்தி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பயன் நிலுவைத் தொகையை கணக்கீடு செய்து அதனை உச்ச நீதி மன்றத்தில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் 15ம் தேதி தொழிலாளர்களை சந்திக்க வரும் உச்சநீதிமன்ற ரிசீவர் குழுவிடம் நிலுவையில் உள்ள பணப் பயன்கள் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் மனுக்களை  தயார் செய்து தனித்தனியாக  அளிக்க வேண்டும், தொழிலாளர்கள் அமைதி காத்து நீதிமன்ற நடைமுறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர்களை ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : Supreme Court ,receiver team ,estate ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...