×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் 11வது நாளாக தொடரும் போராட்டம்

கோவை, மார்ச்.1: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக கோவையில் 11வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதனை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர்ந்து 11வது நாளாக இஸ்லாமியர்கள் கோவை ஆத்துப்பாலம் மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் கூறுகையில், ‘இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. சிறுபான்மையினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் எதிரானது. தமிழக அரசு குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்’, என்றனர். இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Goa ,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...