×

கழிவுநீர் கலப்பதாக புகார் ஈரோடு காவிரி ஆற்றில் அதிகாரிகள் குழு ஆய்வு

ஈரோடு,  மார்ச் 1: ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள்  செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில்  சாக்கடை கழிவுநீருடன் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதாக தொடர்ந்து  புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் மாவட்ட தலைமை  சுற்றுச்சூழல் இணை பொறியாளர் மதிவாணன் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல்  பொறியாளர்கள் ஈரோடு உதயகுமார் அதிகாரிகள் குழுவினர் காவிரி ஆற்றின்  கரைகளில் குமாரபாளையம் முதல் வெண்டிபாளையம் வரை ஆய்வு மேற்கொண்டனர். இந்த  பகுதிகளில் காவிரி ஆற்றில் ஓடும் நீர் எடுக்கப்பட்டு உப்பின் அளவு (டிடிஎஸ்)  கண்டறியப்பட்டது. அதில் உப்பின் அளவு 290 மில்லி கிராம் இருப்பது தெரிய  வந்தது. மேலும் இந்த நீர் பொதுமக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த  நிர்ணயிக்கப்பட்ட தர அளவிற்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தலைமை இணை பொறியாளர் மதிவாணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில்  தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பாசன கால்வாய்கள்,  ஆறுகள், கழிவு நீர் சாக்கடைகளில் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில்  தொடர் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் கடந்த 2 மாதங்களில் ஈரோடு  பகுதிகளில் பூஜ்யநிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக  பராமரிக்காமல் கழிவுநீரை அருகில் உள்ள கால்வாய்களில் வெளியேற்றியது  தொடர்பாக 24 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.  தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் நீர்நிலைகளில் விதிகளை மீறி  வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும்  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும். குமாரபாளையம்-வெண்டிபாளையம் வரை உள்ள காவிரி ஆற்றின் பகுதிகளில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு, டி.டி.எஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில், டி.டி.எஸ் 290 மில்லி  கிராம் தான் உள்ளது. இது பொதுமக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த  நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் தான் உள்ளது. இவ்வாறு மதிவாணன் கூறினார்.

Tags : team ,Erode ,Cauvery River ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...