×

சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்ணா போராட்டம்

ஈரோடு, மார்ச் 1:  குடியுரிமை திருத்த சட்டத்தினை (சி.ஏ.ஏ) திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் கடந்த 21ம் தேதி முதல் நேற்றும் 9வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் சாகுல் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் கோவை ரகீம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  இதேபோல், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகேயும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.கோபி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதன் ஒருபகுதியாக நேற்று கோபி பெரியார் திடலில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முஸ்லிம் அமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்து. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் கலந்து கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சரை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.  இந்த தர்ணா போராட்டத்தில் கோபி, நல்லகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ciee ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...