×

புதிய கல்வி மாவட்ட அலுவலகங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

ஈரோடு, மார்ச் 1:   தமிழகத்தில் உள்ள புதிய கல்வி மாவட்ட அலுவலகங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஈரோட்டில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், நிர்வாகிகள் பதவியேற்பு, பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இவ்விழாவுக்கு மாநில தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 52 புதிய கல்வி மாவட்ட அலுவலகங்களில் போதுமான அளவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நேர்முக உதவியாளர் (கணக்கு) உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் 403 வட்டார கல்வி அலுவலகங்களில் 356 வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு மட்டும் முறையான கண்காணிப்பாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கும் கண்காணிப்பாளர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

 மேலும்  பள்ளிக்கல்வி, நிர்வாக சீரமைப்பு, முதன்மை கல்வி அலுவலகங்கள், கல்வி மாவட்ட அலுவலகங்களில் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் நேரடி உதவியாளர் நியமனத்தினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அமைச்சுப்பணியாளர்கள், பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் ஒரு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். தேர்வு பணிகளை சிறப்பாக நடத்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு தலா ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள், ராஜேந்திரன் அமிர்தகுமார், பொதுச்செயலாளர் சுருளிராஜன், துணை தலைவர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : education district offices ,
× RELATED தமிழக அரசு அலுவலகங்களில் புதிய...