×

கழிவுநீர் தேங்குவதால் பரவும் மர்மகாய்ச்சல் பராசக்தி காலனி மக்கள் பீதி

சிவகாசி, மார்ச் 1:  சிவகாசி நகராட்சி  பராசக்தி காலனி, சுந்தரவேல்தெரு, முனியசாமி கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேரு ரோடு பகுதியில்  500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாறுகால் கழிவுநீர் முறையாக அகற்றப்படுவதில்லை. நகராட்சி சுகாதார பணியாளர்கள் மெயின் தெருக்களில் உள்ள வாறுகால் கழிவுகளை மட்டும் அகற்றி விட்டு இந்த தெருக்களின் உள்ளே உள்ள வாறுகால் கழிவுகளை அகற்றாமல் சென்று விடுகின்றனர். இதனால் இந்த வாறுகாலில் மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் கொசுக்கள், புழுக்களால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. பிள்ளையார் கோயில் தெரு, சுந்தரவேல் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.

இதன்பின்னர் இந்த சாலை சீரமைக்கப்படவே இல்லை.  இதனால் இந்த சாலை குண்டும், குழியுமாகவும், கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பராசக்தி காலனி நுழைவு பகுதியில் சாலையோரம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.   எனவே, பராசக்தி காலனி பகுதியில்  குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பணிகளை உடனே நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை