×

தேனி ஆவின் நிர்வாகத் தேர்தல் 2 பேர் வேட்புமனு வாபஸ் பெற்றதால் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

தேனி, மார்ச் 1: தேனி மாவட்ட ஆவின் நிர்வாகத்திற்கான தேர்தலில் 2 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் வேட்புமனு தாக்கல் செய்த 17 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றனர். மதுரை ஆவினில் இருந்து தேனி மாவட்டத்திற்கென ஆவின் நிர்வாகம் பிரிந்தது. இதனையடுத்து தேனி ஆவினுக்கான தலைவராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் ஓ.ராஜா ஆவின் தலைவராக தேர்வு செய்தது செல்லாது என அறிவித்தது.

இதனையடுத்து ஆவின் நிர்வாகம் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து இடைக்கால தலைவராக ஆவின் நிர்வாகம் ஓ.ராஜாவை நியமித்தது. இதனையடுத்து தேனி ஆவினுக்கான இயக்குநர் தேர்தல் வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொகுதிகளில் 502 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் மொத்தம் 17 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 27ம் தேதி தேனியில் நடந்தது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் நவராஜ் நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட மொத்தம் 22 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனை நேற்றுமுன்தினம் (28ம் தேதி) நடந்தது. பரிசீலனையின் முடிவில் மகேஸ்வரி அழகேசன், வையாபுரி ஆகிய 3 பேர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஓ.ராஜா உள்ளிட்ட 19 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வேட்புமனு வாபஸ் பெற நேற்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று பெருமாள் மற்றும் அப்பிபட்டி சி.செல்வராஜ் ஆகிய 2 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, மீதமுள்ள 17 வேட்புமனுக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, போட்டியின்றி ஓ.ராஜா, இளையராஜா, செல்லமுத்து, நமச்சிவாயம், ஏ.செல்வராஜ், ராஜசேகரன், சரவணன், ராஜலட்சுமி, சோலைராஜா, முத்துலட்சுமி , சுசிலா, கார்த்திகா, கமலம், விஜயலட்சுமி, அனிதா, சாமிதாஸ், வசந்தா ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17 நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்வு போட்டியின்றி நடந்ததால் வருகிற மார்ச் 9ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட 17 நிர்வாக குழு உறுப்பினர்கள் சேர்ந்து நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு துணைத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

Tags : election ,withdrawal ,
× RELATED மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு...