×

உளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 1:  
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த காட்டுநெமிலி கிராமத்தில் உள்ளபழமையான அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கி தினந்தோறும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்தது. நேற்று கோயிலில் இருந்து மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தில் அங்காளம்மன் புறப்பட்டு சென்ற போது அங்கு திரண்ட காட்டுநெமிலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் மயானத்திற்கு அம்மன் சென்ற பிறகு அங்கு மயானக்கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆடு பலியிடப்பட்டு ரத்தசோறு மற்றும் சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவை வைத்து படையல் வைக்கப்பட்டது. இதனை வாங்கி சாப்பிட்டால் நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அந்த பலிச்சோற்றை வாங்கி சாப்பிட்டனர்.

இதே போல் மயானத்தில் இறந்து போன தங்கள்து முன்னோர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும் போது விரும்பி சாப்பிட்ட இனிப்பு, முறுக்கு உள்ளிட்ட பழவகைகள், குவாட்டர், பீடி, வெற்றிலைப்பாக்கு உள்ளிட்டவைகளை படையலிட்டு வழிபட்டனர். இதனை தொடர்ந்து குழந்தை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் வேண்டுதலுக்கு பிறகு பிறந்த குழந்தைகளை மயானத்திற்கு எடுத்து வந்து கோயில் பூசாரியிடம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பூசாரியிடம் தட்சணை கொடுத்து தங்களது குழந்தைகளை வாங்கிச் சென்றனர். உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags : Pilgrims ,auction ,Ulundurpet ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...