×

வாலாஜாபாத் பேரூராட்சியில் அவலம் கழிவுநீர் குட்டையாக மாறிய மழைநீர் கால்வாய்

வாலாஜாபாத், பிப். 28: வாலாஜாபாத் பேரூராட்சியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. மேலும், அப்பகுதிகளில் பன்றிகள், விழுந்து குதித்து விளையாடுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் பஸ் நிலையம், ரயில் நிலையம், காவல் நிலையம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், மாணவர் விடுதிகள், மேல்நிலைப் பள்ளிகள் என ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளும் அதிகரித்துள்ளன.
இதையொட்டி, வாலாஜாபாத் பேரூராட்சி 15 வார்டுகளிலும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மழைநீர் கால்வாயை முறையாக பராமரிக்காததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் விடப்பட்டது. இதனால், தற்போது இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. ஒரு சில வார்டுகளில் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே உடைந்து கிடக்கின்றன. இதனால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாய நிலையும் உள்ளது.

இதற்கிடையில், சாலைகளில் தேங்கும் குழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரில், பன்றிகள், கூட்டமாக குதித்து விளையாடுவதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில், முட்புதர்களில் சிக்கி, நோய்வாய்ப்பட்டு இறக்கும் பன்றிகளால், ஏற்படும் துர்நாற்றம் சுற்றுவட்டார வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி பேரூராட்சி ஊழியர்களும் அந்த பகுதியில் உள்ள பன்றிகளை தற்காலிகமாக அப்புறப்படுத்துகிறார்களே தவிர, இந்த பன்றிகளையும் முழுமையாக அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், உடனடியாக அனைத்து பகுதியில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்த பன்றி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் விரைவில்  பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அதற்கான முயற்சியில் ஈடுபட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.எனவே, சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கால்நடைகள் இறக்கும் அவலம்
வாலாஜாபாத் பேரூராட்சி வெள்ளேரி அம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள ஏரிக்கரையில் பன்றிகளுக்கான கூடாரங்கள் அமைத்து உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பன்றிகள், சுற்று வட்டார தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் உணவு கழிவுகளை கொட்டி வளர்க்கப்படுகிறது. இந்த கழிவுகளை பன்றிகள் மட்டுமின்றி அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் சாப்பிடுவதால், பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு இறக்கும் நிலை உள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Tags : Rainwater Canal ,Walajabad Beirut ,
× RELATED திருமுல்லைவாயலில் சாலை, மழைநீர் கால்வாய் வசதி: அமைச்சரிடம் கோரிக்கை மனு