×

கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை துன்புறுத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர், பிப்.28:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், வணிகர் தின மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அனுப்பர்பாளையம் புதூரில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநகரத் தலைவர் ஜான் வல்தாரீஸ் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா சிறப்புறையாற்றினார். தொடர்ந்து விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: வரும் மே 5ம் தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில், திருப்பூர் மாவட்டம் சார்பாக 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணிகத்துறை என்பது பல்வேறு கட்டங்களாக நசுக்கப்பட்டு வருகிறது. இன்று குப்பை வரி, தொழில் வரி என சொல்லி வசூல் செய்கிறார்கள். குப்ைப வரி என சொன்னால் சாதாரணமாக ரூ.500, ரூ.1000 என எண்ணி விடக்கூடாது. ஒரு கடைக்கு ரூ.96 ஆயிரம் வரி போடுகிறார்கள். இதிலும், மாவட்டங்கள் தோறும் வித்தியாசங்கள் உள்ளது. 96 ஆயிரம் ரூபாய் குப்பை வரி கட்ட சொன்னால்,

இது எந்த வகையில் நியாயம் என கேட்டால், உடனடியாக அதை குறைத்துக்கொள்வதாக கூறுகிறார்கள். அடாவடித்தனமாக அரசுத்துறை அதிகாரிகள் நடந்து வருவதை, அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக அளவில் குப்பை வரியாக இருந்தாலும் சரி, மற்ற எந்த வரியாக இருந்தாலும் வியாபாரிகளை கலந்து பேசாவிட்டால் எந்த வரிகளையும் கட்ட மாட்டோம் என்ற நிலையை வணிகர்கள் எடுக்க உள்ளோம் என்பதை அரசுக்கு எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் தொடர் திருட்டு நடக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, திருட்டு போன பொருட்களை வியாபாரிகளுக்கு மீட்டு தர வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் சாதாரண பிரச்னைகளுக்கு கூட ஒரு கும்பல் கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை துன்புறுத்துகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடை அடைப்பு என்று சொன்னால் அதை வணிகர் சங்கம்தான் முடிவு செய்யும் என்கிற நிலையை உருவாக்கித்தர வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

Tags : gang ,merchants ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை