×

வ.உ.சி. பூங்காவில் சீரமைப்பு பணிகள் மந்தம்

ஈரோடு, பிப்.28: ஈரோடு வ.உ.சி. பூங்காவில் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருவதால் நேற்று ஆணையாளர் இளங்கோவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கும் இடமாக வ.உ.சி.பூங்கா இருந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்த பூங்கா, 10 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் குறைந்தது. இதைத்தொடர்ந்து, பூங்காவை சீரமைப்பு செய்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.6.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கான டெண்டர் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பூங்கா, பராமரிப்பு பணிகளுக்காக பூட்டப்பட்டது. இந்த பூங்கா சீரமைப்பு பணிகளுக்கான டெண்டரை ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தென்னரசுவின் மகன் கலையரசனுக்கு சொந்தமான செந்தூர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் எடுத்திருந்தது.

ஆனால், டெண்டர் எடுக்கப்பட்டு ஓராண்டு ஆனநிலையில் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு சிறுவர் பூங்கா பணிகளை முடிக்க திட்டமிட்டனர். ஆனால், பணிகள் மந்தமாக நடந்து வருவதால் நுழைவாயில் பூட்டு போடப்பட்டுள்ளது. வ.உ.சி.பூங்காவின் உள்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கும் பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோடுகள் தோண்டி போடப்பட்டுள்ளது. பூங்கா பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வ.உ.சி. பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் உள்பகுதியில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், சிறுவர்களுக்கான பூங்கா பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், இதைத்தொடர்ந்து மற்றொரு பூங்கா பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : park ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...