×

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பணித்தள பொறுப்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.28: பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சியில், ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளர்களை மாற்றக் கோரி, முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு அடுத்த பெரிய ஊராட்சியாக திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 24 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்,  சுழற்சி முறையில் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பை பிரித்து வழங்கும் பணித்தள பொறுப்பாளர்களாக 5பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, கிராம மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று, திப்பிரெட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன்கோயில் அருகே, பணித்தள பொறுப்பாளர்கள் மல்லிகா, கிருஷ்ணா, சாந்தி ஆகியோரை, பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சித்ராவிடம், உடனடியாக அவர்களை மாற்றம் செய்து, புதியநபர்களை நியமிக்க வேண்டும் என முறையிட்டனர். இத்தகவல் கிடைத்து தர்மபுரி பிடிஒ ஆறுமுகம், ரவிச்சந்திரன் போனில் தொடர்பு கொண்டனர். உடனே நேரில் வந்து புகார் மனு அளிக்கும்படி தெரிவித்தனர். இது குறித்த தகவல் கிடைத்து, பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊராட்சி மன்றத்தலைவர் இன்னும் 3 நாட்களில் ஆட்களை மாற்றப்படும் என உறுதியளித்தார். அதன்பின் 3 மணிநேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண் தொழிலாளர்கள் கூறுகையில், ‘திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 பெண்கள், பணித்தள பொறுப்பாளர்களாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டுமே, தொடர்ந்து வேலை வழங்கி வருகின்றனர். சுழற்சி முறையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்கக் கோரினால், அலட்சியப்படுத்துகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகிறது. எனவே, பணித்தள பொறுப்பாளர்களை மாற்றி, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா