×

போச்சம்பள்ளி அருகே பரபரப்பு 3 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகை ₹70 ஆயிரம் துணிகர கொள்ளை

போச்சம்பள்ளி, பிப்.28: போச்சம்பள்ளி அருகே மாஜி ராணுவ வீரர் வீடு உள்பட 3 வீடுகளில், 40 பவுன் நகை மற்றும் ₹70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தசிவம்(55). முன்னாள் ராணுவ வீரரான இவரது அண்ணன் கதிர்வேல்(69), ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவர்கள் இருவரும், அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது சகோதரியின் கணவர் சண்முகம் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, போச்சம்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக சாந்தசிவம், கதிர்வேல் ஆகியோர், தங்களது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காலை மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர், சண்முகம் மேல்சிகிச்சைக்காக ஓசூர் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் சாந்தசிவம், கதிர்வேல் குடும்பத்தினரும் சென்று விட்டு, மாலை வீடு திரும்பினர். அப்போது, இருவரது வீட்டில் உள்ள பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இருவரது வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சாந்தசிவத்தின் வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ₹5 ஆயிரம் ரொக்கமும், கதிர்வேல் வீட்டில் 12 பவுன் நகை மற்றும் ₹50 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தசிவம் நாகரசம்பட்டி போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் ஊத்தங்கரை டிஎஸ்பி ஆகியோர், கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.  தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், சென்றாயன்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி திருப்பதி (55) என்பவர் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள், 10 பவுன் நகை மற்றும் ₹15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த 3 வீடுகளிலும் கொள்ளையடித்திருப்பது ஓரே நபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து, நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery ,venture robbery ,houses ,Pochampally ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை