×

ரயிலில் தவறவிட்ட நகைகளை அதிரடியாக மீட்ட போலீசார்

திருவில்லிபுத்தூர் பிப்.28:  சென்னை மாடபாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(34). இவரது மனைவி அனிதா(30) சென்னையில் உள்ள ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லம் ரயிலில் உறவினர்களுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவகாசி வந்தார். ரயிலைவிட்டு இறங்கிய பிறகு தன்னுடைய கை பையை வைத்துவிட்டது தெரியவந்தது. அந்த பையில் ஐந்தரை பவுன் தங்க நகை, செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம், ஏடிஎம் கார்டுகள் இருந்தன. இதற்குள் ரயில் சிவகாசி ரயில் நிலையத்திலிருந்து திருவில்லிபுத்தூரை நோக்கி கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிவகாசி ஸ்டேஷன் மாஸ்டர் திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். அந்த நேரத்தில் கொல்லம் ரயில்  திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தை விட்டு கிளம்பியது. இதுபற்றி திருவில்லிபுத்தூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கொல்லம் ரயிலில் காவல் பணியில் இருந்த ரயில்வே போலீஸ் சக்தி என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் சம்பந்தப்பட்ட கோச்சுக்கு சென்று பார்த்தார். அப்போது அனிதாவின் பை கிடந்தது. அதனை எடுத்து வந்து திருவில்லிபுத்தூர் ரயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். சிவகாசியிலிருந்து அனிதா திருவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு நேற்று அதிகாலை வரவழைக்கப்பட்டு அவர் விட்டுச்சென்ற பை, நகை, பணத்துடன் ஒப்படைக்கப்பட்டது. அனைத்தையும் பெற்றுக்கொண்ட அனிதா ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.


Tags : jewelery ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!