×

குடோன் பணியாளர்கள் கைவரிசை ரேஷன் அரிசி, பருப்பு திருட்டு கடைக்காரர்கள் புகார்

காரைக்குடி, பிப்.28: ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பொருட்களில் மூடைக்கு 2 கிலோவில் இருந்து 5 கிலோ வரை எடை குறைவதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 626 ரேஷன் கடைகள் உள்ளன. 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இக்கடைகளுக்கு காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள குடோன்களில் இருந்து பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. மாதத்தில் பருப்பை பொறுத்தவரை 201 டன்னுக்கு மேலும், அரிசியை பொறுத்தவரை 600 டன்னுக்கு மேலும் தேவை இருக்கும். ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் 50 கிலோ 350 கிராம் எடைகள் கொண்ட மூடைகளில் அனுப்பப்படும். இதில் குடோன்களில் இருந்து பொருட்கள் வந்து இறக்கும் போதே எடை குறைவாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதில் பருப்பை பொறுத்தவரை மூடைக்கு 2 கிலோவுக்கு மேல் குறைந்தும், அரிசியை பொறுத்தவரை 5 கிலோவுக்கு மேல் குறைந்தும் வருகிறது என பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், கடைகளுக்கு பொருட்கள் குறைவாக வருவது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனற்ற நிலையே உள்ளது. எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்திற்கு முன்பு எப்படியோ சமாளித்து வந்தோம். தற்போது பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு எஸ்.எம்.எஸ் செல்வதால் எங்களால் சமாளிக்க முடியவில்லை. எடை குறைவை சமாளிக்க வாங்காத கார்டுக்கு பொருள் வழங்கியதாக கணக்கு எழுதும்போது அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் சென்று விடுகிறது. இதனால் தினமும் பிரச்சனை ஏற்படுகிறது. யாரோ செய்யும் தவறுக்கு நாங்கள் பொறுப்பு ஆகிறோம். எடைகுறைவை சமாளிக்க சில நேரங்களில் மூடைகளில் தண்ணீர் தெளித்து அனுப்புகின்றனர். பொருட்கள் கடைகளுக்கு வந்து இறங்கும் போது அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Gudon employees ,lentil theft shopkeepers ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்