×

புறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்

தஞ்சை, பிப். 28: வல்லத்தில் பயணிகளை புறவழிச்சாலைலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு தனியார் பேருந்து புறப்பட்டது. இதில் பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். இப்பேருந்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் வல்லத்துக்கு டிக்கெட் எடுத்தனர். வல்லம் அருகே சென்ற தனியார் பேருந்து ஊருக்குள் செல்லாமல் புறவழி சாலையில் சென்றது. இதனால் அந்த 5 பயணிகளையும் வல்லதுக்கு முன்பாக உள்ள மின்நகரிலேயே இறக்கி விட்டனர். அந்த 5 பயணிகளும் இரவு நேரத்தில் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை அதே தனியார் பேருந்து தஞ்சை நோக்கி வல்லம் ஊருக்குள் வந்து பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது பொதுமக்கள் இரவு நேரத்தில் பயணிகளை புறவழி சாலையிலேயே இறக்கி விட்டு விட்டு சென்றதால் ஆத்திரமடைந்து தனியார் பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பேருந்தில் வந்த பயணிகள் இறங்கி வேறு பேருந்தை பிடித்து தஞ்சைக்கு சென்றனர்.

இந்த தகவல் கிடைத்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.இதுகுறித்து தஞ்சை போக்குவரத்து வட்டார அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது: தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வல்லம் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று நடுவழியில் பயணிகளை இறக்கி விட்டு சென்றால் அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.Tags : public ,state ,sidewalk ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...