×

பணி பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்

ஒரத்தநாடு,பிப்.28:பணி பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து எம்பிக்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.பணி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை கல்லூரியில் 8ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிக பேராசிரியர்கள் நேற்றுமுன்தினம் காலை முதல் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் நேற்று 2வது நாளாக ர்ந்தது.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தங்களை நிரந்தர பேராசிரியர்களாக அறிவிக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.நேற்று காலையில் நடந்த போராட்டத்தின் போது பேராசிரியர்களுக்கு ஆதரவாக ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளர் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் ஒரத்தநாடு வக்கீல்கள் சங்கத்தினர் கூடியிருந்தனர். மேலும் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்தார். இதைதொடர்ந்து தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேசினார்.

அப்போது இந்த கல்லூரி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆபத்து வராமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரத்தநாடு எம்எல்ஏ ராமச்சந்திரன் மூலமாக பேராசிரியர்களின் பிரச்னை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து சட்டமன்றத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வேன். எனவே பேராசிரியர்கள் தைரியமாக போராட்டத்தை கைவிட வேண்டும். பேராசிரியர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நானும் அந்த போராட்டத்தில் பங்கேற்பேன் என்றார்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு தற்காலிக பேராசிரியர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். அப்போது பேராசிரியர்களை கைது செய்வதற்காக போலீசாரால் கொண்டு வரப்பட்ட வாகனத்தை அப்புறப்படுத்துமாறு எம்பி பழனிமாணிக்கம் கூறினார். இதையடுத்து போலீஸ் வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அடுத்த சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது 3 தற்காலிக பேராசிரியர்கள் விடுவிக்கப்படுவர் என்று அறிவித்திருப்பது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். தற்காலிக பேராசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.எனவே தற்போது பாதிக்கப்படவுள்ள தற்காலிக பேராசிரியர்கள் உடனடியாக உயர்கல்வித்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று அதற்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு கேட்டிருக்கிறேன். மீதமுள்ள தற்காலிக பேராசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு கண்டிப்பாக செய்து தரும். எனவே தற்காலிக பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தற்காலிக பேராசிரியர்கள் கலைந்து சென்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பேராசிரியர்களை சந்திக்காமலேயே கல்லூரிக்கு நேற்று முதல் வரும் மார்ச் 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் பானுமதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : professors ,Ottanadu Government Women's College ,
× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று