×

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் செயின் நூதன திருட்டு

கும்பகோணம், பிப். 28: கும்பகோணம் அருகே போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயினை நூதன முறையில் திருடி சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆழ்வான்கோயில் தியாகி ராமசாமி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. ஓய்வுபெற்ற அரசு அலுவலர். இவரது மனைவி விமலா (64). இவர் கடந்த 25ம் தேதி மாலை தஞ்சை செல்வதற்காக கும்பகோணம் வரதராஜபெருமாள் கோயில் அருகில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்து விமலாவிடம் நாங்கள் இருவரும் போலீஸ். இதுபோல் நகைகளை அணிந்து செல்லும்போது பெண்களிடம் பாதுகாப்பாக செல்லுங்கள் என்று அறிவுறுத்துவோம் என்று கூறினர். மேலும் நகைகளை இப்படி பாதுகாப்பில்லாமல் அணிந்து செல்லக்கூடாது. எனவே நகைகளை கழற்றி கொடுங்கள், பாதுகாப்பாக பேப்பரில் மடித்து தருகிறோம் என்றனர். அதற்கு நான் சேலை முந்தானையால் நகைகளை பாதுகாப்பாக மூடி கொள்கிறேன் என்று விமலா கூறினார். அப்போது நாங்கள் இருவரும் போலீஸ் என கூறி போலி ஐடி கார்டை 2 மர்மநபர்களும் காண்பித்தனர்.இதை நம்பிய விமலா, தான் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து தான் பாக்கெட்டில் வைத்திருந்த பேப்பரில் நகைகளை மடித்து விமலாவிடம் கொடுத்து விட்டு சென்றனர். பின்னர் வீட்டுக்கு சென்று பேப்பரை பிரித்து பார்த்தபோது தாலி செயினுக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் விமலா நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Theft ,Muthathi ,Bow St. ,
× RELATED வங்கி விவரங்கள் திருட்டு கொரோனா...