×

பணி பாதுகாப்பு வழங்க கோரி கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நாகை,பிப்.28: பணிபாதுகாப்பு வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கவுரவவிரிவுரையாளர்களாக 50க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே போல் தற்காலிக பணியாளர்களாக அலுவலக நிலையில் உள்ள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்களை நிரந்தர பேராசிரியார்களாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி கல்லூரி வளாகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து பேராசிரியர் மனோகரன் கூறியதாவது: தமிழக அரசு உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றுவதற்கு 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்தது. இதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரத்தநாடு, பெரம்பலூர், அறந்தாங்கி, லால்குடி ஆகிய 4 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் அடைந்தது. மீதமுள்ள நாகை, வேதாரண்யம், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, இனாம்குளத்தூர், வேப்பூர் ஆகிய கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளும் விரைவில் அரசு கல்லூரியாக மாறும். இந்நிலையில் எம்பில், பிஹெச்டி வரை படித்து விட்டு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளத்தை பெற்றுக்கொண்டு சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறோம்.

ஆண்டு ஒன்றுக்கு 8 மாதங்கள் மட்டுமே பணி வழங்கப்படும். எஞ்சிய 4 மாதங்கள் பணி வழங்கப்படமாட்டாது. இந்நிலையில் கவுரவ விரிவுரையாளர்களாகவும், தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வருபவர்களை பணி நீக்கம் செய்து விட்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பல ஆண்டு காலமாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய எங்கள் நிலைமை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. எனவே கவுரவ விரிவுரையாளர்க நிரந்தர பேராசிரியர்களாக மாற்ற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்றார். கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தால் பேராசிரியர்கள் வகுப்பிற்கு செல்லவில்லை. இதனால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சென்றனர்.


Tags : College lecturers ,
× RELATED அரசு பாலிடெக்னிக் கல்லூரி...