×

போளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ₹26 கோடி நிலுவைத்தொகையை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை கலெக்டர் உறுதியால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்

திருவண்ணாமலை, பிப்.28: போளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ₹26 கோடியை, விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அளித்த உறுதியை ஏற்று, தொடர் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தரணி சர்க்கரை ஆலை ₹26 கோடி கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை வழங்காமல் சுமார் 18 மாதங்களாக விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. மேலும், நடப்பு பருவத்தில் அரவையை தொடங்காமல், பருவம் முற்றிய கரும்பை கொள்முதல் செய்யாமல் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, போலீசார் விவசாயிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். ஆனாலும், நிலுவைத்தொகை பிரச்னை தீரும் வரை தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.இதையடுத்து ஆரணி ஆர்டிஓ தலைமையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில், தரணி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த சுமார் 55 ஆயிரம் ஏக்கர் கரும்பை, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் செங்கம் பன்னாரி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்ப அனுமதிக்கப்பட்டது.ஆனாலும், கொள்முதல் நிலுவைத்தொகை பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட முயற்சித்தனர். ஆய்வுக்காக வெளியூர் சென்ற கலெக்டர், அலுவலகம் திரும்புவதில் தாமதம் ஆனது.இதனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை காத்திருந்த விவசாயிகளை, போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள், மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், விவசாயிகளை போலீசார் சமரசப்படுத்தினர். கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மதியம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், துணைத்தலைவர் பலராமன், விவசாயிகள் சங்கம் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, கரும்பு விவசாயிகளின் பிரச்னை குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், தரணி சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநரிடம் மூன்று முறை பேசியதாகவும், விரைவில் நிலுவைத்தொகையை பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பலராமன் கூறுகையில், `கலெக்டருடன் நடத்திய ேபச்சுவார்த்தை நம்பிக்கை அளித்திருக்கிறது. அடுத்த மாதம் 14ம் தேதி முதல் தினமும் 200 விவசாயிகள் வீதம் நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு எந்தெந்த நாட்களில் பணம் கிடைக்கும் என்ற முழுமையான விபரத்தை, ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்று, நான்கு நாட்களில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதோடு, நான்கு நாட்களுக்கு பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளை மீண்டும் சந்திப்பதாக கலெக்டர் உறுதியளித்திருக்கிறார். ஆலை நிர்வாகத்திடம் பேசி, உறுதி மொழியை பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால்தான் விவசாயிகளை உடனே சந்திக்க முடியவில்லை என கலெக்டர் தெரிவித்தார். எனவே, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம் என்றார்.

Tags : collector ,Polur Tarangi Sugar Plant ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...