×

கொரோனா வைரஸ் தாக்குதலால் விமான சேவைகள் நிறுத்தம் குமரி மீனவர்கள் உட்பட 800 பேர் ஈரானில் தவிப்பு

நாகர்கோவில், பிப்.28: கொரோனா வைரஸ் சீனாவின்  வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கி தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அங்கு பாதிப்பு வெகுவாகக் குறையத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் ஈரானில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பலியானவர் எண்ணிக்கை அங்கு 19 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அங்கு தொழில், வேலை விஷயமாக சென்றுள்ள மீனவர்கள் உள்ளிட்டோர் பீதியடைந்துள்ளனர். அவர்கள் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ள போதிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தவித்து வருகின்றனர்.இந்தநிலையில் குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தை சேர்ந்த ஜாண் என்பவருக்கு ஈரானில் இருந்து மீனவர்கள் இது தொடர்பாக வீடியோ, ஆடியோக்களை அனுப்பி தங்களை சொந்த ஊருக்கு மீட்டுவர உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஈரானில் உள்ள மீனவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் ஈரானில் சீரா என்ற இடத்தில் தங்கியுள்ளோம். கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுவதால் இங்கிருந்து  மற்ற நாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள், கப்பல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் இந்தியாவுக்கு வர முடியாத நிலை உள்ளது. நாங்கள் எங்கள் முதலாளியிடம் ஊர் திரும்ப வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் எங்களுக்கு எப்படி வருவது என்று வழி தெரியவில்லை. இங்குள்ள தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோதும் முறையாக பதில் இல்லை. மீனவர்கள் உள்ளிட்ட 800 இந்தியர்கள் உள்ளனர் என்று எதிர்பார்க்கிறோம். எங்களை எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்துவாழ வழி செய்ய வேண்டும். அரசு நடவடிக்கை எடுத்து விமானம் அனுப்பி எங்களை மீட்டு செல்ல வேண்டும். எங்களின் நிலைமையை அங்குள்ள முதல்வர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோரிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Tags : fishermen ,Kumari ,Iran ,virus attack ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...