×

கலெக்டர் வழங்கினார் குடிநீர் வசதி செய்து கொடுக்காததால் ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்கள் சிறைபிடிப்பு

திருவாரூர், பிப்.27: திருவாரூர் அருகே ஓடாச்சேரியில் குடிநீர் வசதி செய்து கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் அருகே ஓடாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக இதுபோன்று ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வரும் பகுதிகளை சுற்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் இதேபோன்று தென்னங்குடி பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்காக மக்கள் துன்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி கடந்த 2 ஆண்டு காலமாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்காத ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் மீண்டும் அந்த பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இந்த கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்டிற்கு சென்று அங்கிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளிடம் உடனே குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து குடிநீருக்கான போர்வெல் அமைக்கும் பணியினை நாளையே (இன்று) துவங்குவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் 3 மணி நேரத்திற்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : ONGC ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...