×

மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டம்

சேதுபாவாசத்திரம், பிப். 27: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய 2 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் இங்கிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வர். மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவர். விசைப்படகுகளில் இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தற்போது அந்த வலைகளை பயன்படுத்தாமலேயே மற்ற வலைகள் மூலம் அதிகளவு மீன் பிடித்து கரைக்கு வரும் விசைப்படகுகள் மீது இரட்டைமடி வலை பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதே நேரம் தற்போது மீன்மடி, இறால்மடி என இருவகையான வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதாக கூறுகின்றனர். மீன்மடியை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதால் அதிகளவில் மீன்கள் மற்றும் கழிவுமீன்கள் பிடிபடுகின்றன. மீனவர்கள் மீன்மடியை பயன்படுத்துவதற்கும் மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் உள்ள 52 விசைப்படகுகள் நேற்று 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முடங்கி உள்ளனர். 2 நாள் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ரூ.1 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Fishermen ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...