×

ஆரணியில் பரபரப்பு தொழிலதிபர்களின் வீடு, கடை 2வது நாளாக ஐடி சோதனை: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்

ஆரணி, பிப்.27: ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள், திருமண மண்டபம் உள்பட 16 இடங்களில் விடிய விடிய 2வது நாளாக சோதனை நடந்தது. இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர் அதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயில் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், அவரது தம்பி சிவக்குமார். இருவரும் பட்டுச்சேலை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 3 திருமண மண்டபங்கள் உள்பட பட்டுச்சேலை விற்பனை கடை, சாரீஸ் விற்பனை கடைகள் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம், அவரது சகோதரர் ராமலிங்கம். இவர்களும் பட்டு சேலை உற்பத்தி நிறுவனம் மற்றும் கடைகளை நடத்தி வருகின்றனர்.

இவர்களது நிறுவனங்களில் முறையாக கணக்கு காட்டாமல், குறைவான வரியை செலுத்தியதாகவும், பணம் மற்றும் சொத்துக்களை ஏராளமாக குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழுவினர், சென்னை இணை ஆணையாளர் சுப்பாராவ் தலைமையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி முதல் விடிய, விடிய 4 பேர் வீடு, கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் என 16 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை சென்றனர்.

இந்நிலையில் 16 இடங்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மூட்டைகளில் கட்டி 4 பேரின் வீடுகளுக்கு நேற்று காலை எடுத்துச் சென்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் முன்னிலையில் ஆவணங்கள் பிரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது நாளாக நேற்று நடந்த சோதனையின் போதும் வெளியாட்கள் யாரையும், அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Tags : checking ,ID ,house ,shop ,Arany ,
× RELATED திருவேற்காடு கோயிலில் திருடிய...