×

வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் அவதி: தீ வைத்து எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்

வேலூர், பிப்.27: வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் தீ வைத்து எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் சுமார் 200 டன் மக்கும், மக்காத குப்பைகள் அகற்றப்படுகிறது. இப்பணிகளில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வீடு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை நேரடியாகச் சென்று பெற்று, திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில் தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் தன்மை கொண்ட குப்பைகள் உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.இருப்பினும் வேலூர் மாநகராட்சியில் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் பொது இடங்களில் கொட்டி இரவோடு, இரவாக தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு நோய் பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக நாள்தோறும் மாலை 3 மணிக்குமேல் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலமாக நேரடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் உள்ள பொது இடத்தில் மர்ம நபர்கள் சிலர் இரவோடு, இரவாக பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இரவு தொடங்கி காலை வரை எரியும் குப்பைகளில் இருந்து கரும்புகை வெளியேறுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச பாதிப்பு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். கரும்புகை மூட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சூழ்வதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.எனவே, சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore Green Circle Service Road ,
× RELATED வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ்...