×

நிறைவேற்றாத திட்டப்பணிகளுக்கு எப்படி ஒப்புதல் வழங்குவது?

சேலம், பிப்.27: சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றாத திட்டப்பணிகளுக்கு நாங்கள் எப்படி ஒப்புதல் வழங்க முடியும் என ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். சேலம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் ரேவதி தலைமையில் நேற்று நடந்தது.  துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சிக்குழு செயலாளர் விஜயகுமாரி வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழுவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக,  ஊராட்சி குழு தலைவர் ரேவதி, மாவட்டத்தின் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட நிதி குறித்து தெரிவித்தார்.

மேலும், இடைப்பாடி, பனமரத்துப்பட்டி, நங்வள்ளி, ஓமலூர், மேச்சேரி ஒன்றியங்களில் ₹1.28 கோடி மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைத்தல், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல், சாலை மேம்பாடு, தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கான மன்ற அங்கீகாரம் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட 9வது வார்டு திமுக உறுப்பினர் அழகிரி, `ஊராட்சிக்குழு தலைவர் குறிப்பிட்டபடி, ஓமலூர் தும்பிப்பாடி ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி எதுவும் செய்து தரவில்லை’ என குற்றம்சாட்டினார். இதேபோல், கூட்டத்தில் வாசிக்கப்பட்ட  பல திட்டப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,  ஏற்கனவே செய்த பணிகளுக்கு நாங்கள் எவ்வாறு ஒப்புதல் வழங்க முடியும் எனவும் உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த செயலாளர் விஜயகுமாரி, `கலெக்டர் அலுவலகத்தில் தரப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இங்கு வாசிக்கப்படுகிறது. வேண்டுமென்றால் உறுப்பினர்களே, நேரடியாக சென்று திட்டப்பணிகளை பார்வையிட்டுக் கொள்ளலாம் அல்லது கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்,’ என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், ஆங்கிலத்தில் உள்ள கூட்ட பொருட்களை, தமிழில் மொழிபெயர்த்து வழங்கினால் மட்டுமே தங்களால் புரிந்துகொள்ள முடியும் என வலியுறுத்தினர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்