×

பொதுத்தேர்வு நேரத்தில் தொடர் பயிற்சி வகுப்புகள்

நாமக்கல், பிப்.27: நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கிவரும் நிலையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். செய்முறை தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் என பலவகையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பிப்ரவரி மாதத்தில் செய்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு ஒரு நாள், 2 நாள், 3 நாள் என தொடர்ந்து பல்வேறு வகையான பயிற்சியை இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அளித்து வருவது, பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும்.

ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பயிற்சி அளிக்கவேண்டும். அதற்கான உரிய நிதியை மத்திய, மாநில அரசுகள், கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஒதுக்கீடு செய்யவேண்டும். பிப்ரவரியில் நிதியை ஒதுக்கீடு செய்து இம்மாதத்தில் ஆசிரியர்களை தொடர் பயிற்சியில் கலந்துகொள்ள செய்யும் போக்கை, பள்ளி கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும். கல்வியாண்டின் தொடக்கத்தில் தரவேண்டிய பயிற்சிகளை, கல்வி ஆண்டின் நிறைவு பெறக்கூடிய மாதங்களில் நடத்துவதும், கல்வி ஆண்டின் நிறைவு பெற மாதங்களில் தரக்கூடிய பயிற்சிகளை, கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்துவதையும் பள்ளிகல்வித்துறை முற்றிலும் கைவிட வேண்டும்.மேலும், இன்றும் (27ம்தேதி), நாளையும் (28ம்தேதி) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  மாநில திட்ட இயக்குனர் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும்  முதுகலை ஆசிரியர்களுக்கு  2 நாட்கள் கணினி சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்திலும் முதுகலை ஆசிரியர்கள் இன்றும், நாளையும் கலந்து கொள்ளவேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். யாரின் உத்தரவை பின்பற்றுவது என ஆசிரியர்களிடையே குழப்பமான நிலை உள்ளது.இவ்வாறு ராமு தெரிவித்துள்ளார்.

Tags : workshops ,election ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை