×

உடுமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

உடுமலை:   திருப்பூர்  மாவட்டம் உடுமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், பள்ளி மாணவ மாணவிகளும்  மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை நகரில் மத்திய பேருந்து  நிலையம் அருகே தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்ற  வளாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிக்கு நாள்தோறும்  கிராம பகுதிகளில் இருந்து அரசு மருத்துவமனை, நீதிமன்றம், தாலுகா அலுவலகம்  உள்ளிட்டவற்றுக்கு வேலை நிமித்தமாக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.  உடுமலை நகரமானது தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக  விளங்குவதால் கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனி வழியாக தென் மாவட்டங்கள்  செல்லும் ஏராளமான பேருந்துகள் உடுமலை மத்திய பேருந்து நிலையம் வந்து  செல்கின்றன. திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான அமராவதி அணை,  திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் கேரள  மாநிலம் மூணாறு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக உடுமலை திகழ்வதால்  நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநிலங்களின்  பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், உடுமலை நகரம்  மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருகிறது.

 மேலும் கல்லூரி, ஐ.டி.ஐ,  பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கிராம பகுதிகளில்  இருந்து நாள்தோறும் உடுமலை மத்திய பேருந்து நிலையம் வந்து அதன்பின்  திருப்பூர் பொள்ளாச்சி கோவை நோக்கி செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில்  அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பது  வழக்கம். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டைமிங் பிரச்னை காரணமாக உடுமலை-பொள்ளாச்சி சாலையில்  போட்டிபோட்டுக் கொண்டு செல்வதால், பல்வேறு  இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை  வேலைகளில் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள்  ஆங்காங்கே மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்கின்றன. நேற்று காலை உடுமலையிலிருந்து  பொள்ளாச்சி செல்லும் கொல்லம் பட்டறை சாலையில் போக்குவரத்து நெரிசல் கரணமாக சுமார் 3 கி.மீ.  தொலைவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து  நின்றன. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த  அவதிக்குள்ளாகினர். வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் குறித்த நேரத்திற்கு  வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

போக்குவரத்து நெரிசலை  ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து போலீசார் பணிக்கு வராத நிலையில்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆளின்றி நீண்ட நேரமாக வாகனங்கள்  நடுரோட்டில் நின்று கொண்டிருந்தன.  ஆனால் அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வரும்போது  மட்டும் போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதோடு  காலை, மாலை வேளைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மற்ற வேளைகளில் போக்குவரத்து போலீசாரை நகர் முழுவதும் தேடிப்  பார்த்தாலும் கிடைப்பதில்லை. வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு  அவர்கள் சென்றிருந்தாலும் சட்டம் ஒழுங்கு போலீசார் நகரில் போக்குவரத்து  நெரிசலை தவிர்ப்பதற்கு உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள்  மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Udumalai ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...