×

நகராட்சி கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூல் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் ஊட்டி நகரம்

ஊட்டி, பிப். 27: ஊட்டி ஏ.டி.சி, சேரிங்கிராஸ், பஸ் நிலைய பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது.  சர்வதேச சுற்றுலா நகரமாகவும், நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாகவும் ஊட்டி விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளு குளு காலநிலைைய அனுபவிக்கவும், இங்குள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை பார்த்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர கிராம பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கான ஏராளமான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடங்களை நவீனப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே இருந்த கட்டண கழிப்பிடங்கள் இடிக்கப்பட்டு ஏ.டி.சி., சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நம்ம டாய்லெட் எனப்படும் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டது. இவற்றை பராமரிக்கும் பொருட்டு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது.

ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் அவற்றை முறையாக பராமரிக்காமல் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.  மேலும் போதிய பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக ஏ.டி.சி மற்றும் ஊட்டி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கட்டண கழிப்பிடங்களை தவிர்ந்து வருகின்றனர். மேலும் ஊட்டி நகரில் உள்ள எட்டின்ஸ் சாலையோரம், ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானம், மத்திய பஸ் நிலைய பகுதிகள், சேரிங்கிராஸ், மார்க்கெட் அருகேயுள்ள பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடங்களாக மாறியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஊட்டிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூல், மோசமான பராமரிப்பு போன்ற காரணங்களால் ஊட்டி நகரமே திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...