×

கோவை அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு

கோவை, பிப். 27: கோவை அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. இன்றும் இரண்டாவது நாளாக இந்த ஆய்வு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு கலைக் கல்லூரி சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கல்லூரியில் தற்போது இளநிலையில் 24 பட்டப்படிப்புகளும், முதுநிலையில் 21 பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகிறது. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தேசிய தர மதிப்பீட்டில் இக்கல்லூரிக்கு ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரத்தை எதிர்நோக்கி உள்ளது.
இந்நிலையில், பாடத்திட்டம், கற்றல்  கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர் முன்னேற்றம் உள்ளிட்ட ஏழு அடிப்படைகளில் ஆய்வு நடத்துவதற்காக தேசிய தர நிர்ணய குழுவினர் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.

இந்த குழு இன்றும் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. இந்த குழுவில் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த சசிகுமார் திமான், ராஜஸ்தானை சேர்ந்த
முரளிதர ராவ், கேரளாவை சேர்ந்த அஜின் முகமது ஆகியோர் இருந்தனர்.இந்த ஆய்வையொட்டி கடந்த 2014 முதல் 2019 வரை நடைபெற்ற கல்வி, ஆராய்ச்சி, அடிப்படை வசதிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை இந்த குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.  கோவை அரசுக் கல்லூரிக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரம் கிடைத்தால் கல்வி, ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசின் கூடுதல் நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...