×

கைதிகளை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி

கோவை, பிப்.27:  தமிழகத்தில் 9 பிரதான சிறை, 95 கிளை சிறை உட்பட 136 சிறைகள் உள்ளது. இதில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறை காவலர்கள், ஜெயிலர்கள், வார்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.சிறை கைதிகள் சிலர் அடிக்கடி தகராறு, வாக்குவாதம் செய்வது நடக்கிறது. சிலர் சாப்பிட மறுத்து போராட்டம் நடத்துவதும், சிலர் தற்கொலைக்கு முயற்சிப்பதும் நடக்கிறது. கைதிளுடன் வார்டர்கள் மோதல் போக்கில் இருந்தால் பிரச்னை மேலும் அதிகமாகி விடும் நிலையிருப்பதாக தெரிகிறது. பல்வேறு மாவட்ட சிறைகளில் அடாவடி கைதிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றம் செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, வேலூர், பாளையங்கோட்டை கைதிகள் சிலர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைதிகள் மாற்றப்பட்டால் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு ஆஜர்படுத்த அழைத்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. கைதிகளை கையாள சிறை அலுவலர்கள், வார்டர்களுக்கு பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தும் குற்றவாளிகளை எப்படி சமாளிப்பது, கண்காணிப்பது, மனரீதியாக கைதிகளை அணுகி அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பது, தற்கொலை மன நிலையில் உள்ள கைதிகளிடம் மன மாற்றம் ஏற்படுத்துதல், கைதிகளை படிப்பு, சிறை தொழில் கூடங்களில் வேலை செய்ய வைத்தல் போன்றவை குறித்து சிறைத்துறையினருக்கு 13 பிரிவாக பயிற்சி தரப்பட்டுள்ளது. கைதிகளின் போராட்டம், மிரட்டல்களை சமாளிக்க, அடக்க சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைதிகளின் அடாவடி செயல்பாடுகளை வார்டர்கள் எளிதாக சமாளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : prisoners ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...