×

அனைத்து கிராமங்களிலும் கிணறுகள் அமைத்து குடிநீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டும்

கடலூர், பிப். 27:  ஆழ்துளை கிணறுகள் அனைத்து கிராமங்களிலும் அமைத்து குடிநீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கடலூர் ஊராட்சி குழு மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட ஊராட்சி செயலர் ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், கந்தசாமி, சக்தி விநாயகம், நவநீதகிருஷ்ணன், மகாலட்சுமி, பெருமாள், சித்ரா, சன் முத்துகிருஷ்ணன், ஜெகநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் தங்களது பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:முஷ்ணம் பகுதி தாலுகா மற்றும் ஒன்றிய அளவில் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒன்றிய அலுவலகத்துக்கான கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும். இதுபோன்று கிராம பகுதிகளில் கூடுதலாக மினி பஸ் இயக்க வேண்டும். வீராணம் ஏரியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் படகு போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

நல்லூர் பகுதி மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது. இதனால் பல்வேறு திட்டப்பணிகள் சென்றடைவதில் தொய்வு ஏற்படுகிறது. வேப்பூரில் நவீனமயமாக்கல் உடன் மருத்துவமனை மேம்படுத்தப்பட வேண்டும்.கருவேப்பிலங்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. ஆழ்துளை கிணறுகள் அனைத்து கிராமங்களிலும் அமைத்து குடிநீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டும். பரங்கிப்பேட்டை முதல் விருத்தாசலம் வரையிலான சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைக்க வேண்டும். மருதூர் காலனி அருந்ததியினர் மக்கள் பயன்பெறும் வகையில் சாலை மற்றும் பாலம் அமைக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு பெரியகுப்பம் காலனியில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.

கீழ்மாம்பட்டு அரசு பள்ளியின் வகுப்பறை கட்டிடம் பற்றாக்குறையில் உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வியில் திறம்பட உயர்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று புதுப்பாளையம் அரசினர் உயர்நிலை பள்ளியில் மதில் சுவர் அமைக்க வேண்டும். பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய மண்டலம் அமைப்புக்காக 25 கிராமங்கள் பாதிப்படையும் சூழலில் இருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பால் ரத்தாகி உள்ளது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுகிறதா என தெரியவில்லை. சிப்காட் பகுதியில் மாதந்தோறும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களில் காஸ் பைப்லைன் புதைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதுபோன்று காஸ் லைன் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் மனோன்மணி, மனமகிழ் சுந்தரி, டாக்டர்கள் சண்முகசுந்தரம், தமிழரசி, தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பலர் தங்களது பகுதி கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இதை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் பேசுகையில், அனைத்து மாவட்ட கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட ஊராட்சி மன்றத்தின் பணிகள் தொய்வின்றி அனைத்து வார்டுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ரிஸ்வானா பர்வீன் நன்றி கூறினார்.

Tags : wells ,villages ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்