×

ஐஐடி வளாக குப்பையை கண்காணிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தலைமையில் குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் குப்பை கையாளப்படுவது குறித்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தலைமையில் குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஐஐடி வளாகத்தில் காட்டு பூனைகள், குள்ளநரிகள், கலைமான்கள், புள்ளிமான்கள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும், 40 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளது. ஆனால் அதே வளாகத்தில் 1,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 8,500 மாணவர்களும் உள்ளனர். அவர்களால் வளாகத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை தேங்குகின்றன. இந்த குப்பையை உண்பதாலும், உணவுக்காக வரும் நாய்கள் கடிப்பதாலும், மான்கள் இறந்து விடுகிறது. எனவே, ஐஐடி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை ஐஐடி வளாகத்தில் குப்பை முறையாக கையாள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன உயிரினங்கள் பாதிக்கப்படாத வகையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், குப்பை கையாள்வது மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பிற்கு சென்னை ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. மேலும் சென்னை ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக வனத்துறை, சென்னை ஐஐடி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர், குப்பை கையாள்வது, வன உயிரின பாதுகாப்பு குறித்து, அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வறிக்கையை 6 மாதத்திற்கு ஒருமுறை, தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags : Committee ,IIT ,Pollution Control Board ,Green Tribunal ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...