×

பல்லாவரம் அருகே இரவு நேரங்களில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல், கலைஞர் சாலை, நல்லதம்பி சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.  பல்லாவரத்தில் இருந்து பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவதற்கு, குறுக்கு வழிச்சாலையாக பம்மல் நல்லதம்பி சாலை உள்ளது. அதேபோல், பல்லாவரத்தில் இருந்து கவுல்பஜார் மற்றும் கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு பம்மல், கலைஞர் சாலை பிரதான சாலையாக உள்ளது.  காலை, மாலை என அலுவலக நேரங்களில் வாகன நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக இந்த சாலைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகன ஓட்டிகள் எளிதாக, போக்குவரத்து நெரிசலின்றி சென்று வர முடிகிறது. இந்த சாலைகள் மிகவும் குறுகிய சாலைகளாக இருப்பதாலும், தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிப்பதாலும் தற்போது அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சமீபகாலமாக இரவு நேரங்களில் இந்த சாலைகளில் அதிக அளவில் மாடுகள் உலா வருகின்றன.  இதனால், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலைகளில் நிற்கும் மாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை முறையாக கட்டிப் போட்டு வளர்க்காமல், சாலையில் சகட்டு மேனிக்கு அவிழ்த்து விடுகின்றனர். இதனால் தினமும் இந்த சாலையில் சிறு சிறு விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன. ஏற்கனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோன்று சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று மற்ற நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களும் அறிவிக்க முன் வர வேண்டும். அப்போதுதான் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது தடுக்கப்படும்.  

மேலும் சாலையோரம் குவித்து வைக்கப்படும் குப்பைகளை மாடுகள் மேய்வதால் குப்பைகள் சாலையெங்கும் சிதறி கடும் துர்நாற்றம் வீசி, அந்த இடமே சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாடுகள் வளர்ப்பது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, அதனை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், சாலையில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் கட்டிப் போட்டு வளர்க்க உரிமையாளர்கள் முன்வர வேண்டும். தவறும் மாட்டு உரிமையாளர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். இதன் மூலம் மாடுகள் மூலம் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும். வாகன ஓட்டிகளும் விபத்தின்றி, போக்குவரத்து நெரிசல் இன்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும்’’ என்றனர்.

Tags : Road accidents ,Pallavaram ,
× RELATED செங்கல்பட்டில் அனைத்து கட்சி...