×

பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்

ஆவடி: ஆவடி, பக்தவத்சலபுரத்தில் இருந்து மழைநீர் கால்வாய் பருத்திப்பட்டு ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாய் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மழை காலத்தில், ஆவடி டேங்க் பேக்டரி, ஓ.சி.எப், காந்தி நகர், பக்தவத்சலபுரம், சி.டி.எச் சாலை, கோயில்பதாகை ஆகிய இடங்களில் இருந்து வரும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக  சென்று ஏரியில் கலக்கிறது.  தற்போது இந்த கால்வாய் பராமரிப்பு இன்றியும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தின் போது, கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரம் பகுதிகளில் புகுந்து விடுகிறது. மேலும், மழைநீர் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் விடப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பருத்திப்பட்டு ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் 30 முதல் 40 அடி அகலத்தில் இருந்தது. இந்த கால்வாயை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு 7 அடியாக சுருங்கிவிட்டது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது.  கால்வாயை முறையாக பராமரிக்காததால் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கழிவு நீரில் மக்கி கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா  உள்ளிட்ட மர்ம நோய்களை பரப்புகிறது. மேலும், ஏரியில் கலக்கும் கழிவுநீரால், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு, பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது.  

இதோடு மட்டுமல்லாமல், குப்பை கழிவுகள் தேங்கி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியவில்லை. மழை காலத்தின்போது, கால்வாயில் செல்ல முடியாததால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தெருக்களில் ஆறாக ஓடும். இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சார்பில் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால், பொதுமக்கள் சுகாதார கேட்டால் பல ஆண்டாக அவதிப்படுகின்றனர்.  எனவே, ஆவடி மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனித்து பக்தவச்சலபுரத்தில் இருந்து பருத்திப்பட்டு ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாயை பராமரிக்கவும், குப்பை கழிவுகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Green Park ,Cottonwood Lake ,
× RELATED பருத்திப்பட்டு பசுமை பூங்காவில்...