×

கரூர் பெரியாண்டாங்கோவில் அமராவதி ஆற்றில் மோட்டார் மூலம் உறிஞ்சி தண்ணீர் திருட்டு

கரூர், பிப். 26: கரூர் பெரியாண்டாங்கோவில் அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருவதை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் விசுவநாதபுரியில் இருந்து பெரியாண்டாங்கோயில் வழியாக அமராவதி ஆறு நகர்ப்பகுதியின் வழியாக செல்கிறது. இதில் விசுவநாதபுரி பகுதியில் இருந்து பெரியாண்டாங்கோவில் பகுதி வரை அமராவதி ஆற்றங்கரையோரம் அனுமதியின்றி ஜெனரேட்டர் மோட்டார் வைத்து சிலர் குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் இதுபோல மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை கண்காணித்து அகற்றும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் பெரியாண்டாங்கோயில் பகுதியில் டவுன் போலீசார் உதவியுடன், அதிகாரிகள் ஜெனரேட்டர் மோட்டார்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது அங்கு திரண்ட அப்பகுதியினர், கோடைக்கால துவக்கத்தின் போது, அதிகாரிகள் சார்பில் முறைப்படி நோட்டீஸ் விடப்பட்டு பின்னர் அகற்ற வருவார்கள், ஆனால் தற்போது நோட்டீஸ் எதுவும் வழங்காமல் திடீரென வந்துள்ளனர். எங்கள் பகுதியில் உள்ளதை மட்டும் அகற்ற சொல்வதன் நோக்கம் என்ன, அமராவதி ஆற்றின் மேலும் சில இடங்களிலும் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. எனவே பாரபட்சமின்றி அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து, இந்த பகுதி மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித பாரபட்சமும் இன்றி இந்த பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே அரைமணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, முறைப்படி அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், பெரியாண்டாங்கோயில் பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Karur Periyantango ,Amaravati river ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு...