×

பட்டு சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள் உட்பட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

ஆரணி, பிப்.26: ஆரணியில் பட்டு சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள், திருமண மண்டபம் உட்பட 16 இடங்களில் நேற்று, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயில் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், பட்டு சேலை உற்பத்தி நிறுவனர். இவருக்கு சொந்தமாக ஆரணி பகுதியில் 3 திருமண மண்டபங்கள் உட்பட பட்டு சேலை விற்பனை கடை, சாரீஸ் விற்பனை கடைகளை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சொக்கலிங்கம், ராமலிங்கம். இவர்களும் பட்டு சேலை உற்பத்தி நிறுவனம் மற்றும் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளுக்கு, முறையாக கணக்கு காட்டாமல், குறைவான வரியை செலுத்தியதாகவும், பணம் மற்றும் சொத்துக்களை ஏராளமாக குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சென்னை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வருமான வரித்துறை அதிகாரிகள் உட்பட 30 பேர் கொண்ட குழுவினர், நேற்று குணசேகரனின் வீடு, கடைகள் மற்றும் 3 திருமண மண்டபங்களிலும், சொக்கலிங்கம், ராமலிங்கம் ஆகியோரது வீடு மற்றும் கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர் அதன்படி, மதியம் 1.30 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்தது. அப்போது, மேற்கண்ட 3 பேருக்கும் சொந்தமான கடைகள், திருமண மண்டங்கள் உட்பட 16 இடங்களில் சோதனை நடத்தி எடுக்கப்பட்ட ஏராளமான ஆவணங்களை ஓரிடத்தில் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், `வருமான வரி ஏய்ப்பு சம்பந்தமாக கிடைத்த தகவலின் பேரில் 16 இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தி வருகிறோம். வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். ஆரணியில் ஒரே நாளில் 16 இடங்களில் வருமானத்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Income Tax Department ,locations ,silk manufacturer ,shops ,home ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...