×

திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு

திருப்பூர், பிப். 26:  திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும், பேரூராட்சி அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராக்கியாபாளையம் கிளை சார்பில், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், சி.ஐ.டி.யு. சார்பில் திருமுருகன்பூண்டி நடராசன், அம்மாபாளையம் ஒன்றிய குழு பாலசுப்ரமணியம் ஆகியோர் செயல் அலுவலர் குணசேகரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த 2008ம் ஆண்டு வரை பேரூராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பிறகு தற்போது வரை புதிதாக உருவாகி உள்ள குடியிருப்புகளுக்கு பேரூராட்சி அனுமதி இல்லாமல் ஆயிரக்கணக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வைப்புதொகை, இணைப்பு கட்டணம், மாதாந்திர குடிநீர் கட்டணம் உள்பட பல லட்சம் ரூபாய் அரசு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மாநகராட்சியுடன் ஒப்பிடுகையில் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வு அதிக அளவு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 மனுவை பெற்று கொண்ட செயல் அலுவலர் இது குறித்து கூறியதாவது:- குடிநீர் கட்டண உயர்வு என்பது திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு மட்டுமான உயர்வு அல்ல. தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட அரசாணையின் படியே உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 3 ரூபாய்க்கு 1000 லிட்டர் குடிநீர் வழங்கி வந்த நிலையில் தற்போது அதை 10 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தி உள்ளது. இதுவே குடிநீர் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இதேபோல் பேரூராட்சி அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தி அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.


Tags : Petrochemical Action Officer ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை