×

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சேலத்தில் ஆலோசனை

சேலம், பிப். 26: தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களில் அதனை திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர்,கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க, மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து, வரும் மார்ச் 1ம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பங்கேற்க வேண்டும் என்று  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லிக்கு சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் திரும்பினார். இந்நிலையில்  அவர், நேற்று சேலத்தில் தங்கியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது 1ம் தேதி  ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும், 4ம்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், 5ம்தேதி நாமக்கல், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் நடக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதே போல் 7ம்தேதி நாகப்பட்டினம், 8ம் தேதி திருவள்ளூர், 14ம்தேதி திருப்பூர் மாவட்டங்களில் விழா நடத்துவது குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது.

Tags : Minister of Health ,Chief Minister ,Salem ,foundation ,Medical Colleges ,
× RELATED இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை...