×

சாயப்பட்டறைகளுக்கு இடம் கொடுப்போர் மீது நடவடிக்கை மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி

பள்ளிபாளையம், பிப்.26: சாயப்பட்டறைகளுக்கு இடம் கொடுக்கும் நில உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆயத்தமாகி வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணியினை முடுக்கிவிட்டுள்ளது. பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் இயங்கி வரும் அனுமதியில்லாத சாயப்பட்டறைகள் மீது மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து நடவடிக்க மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் அனுமதியின்றி ரகசியமாக இயங்கும் சாயப்பட்டறைகள் கழிவுநீரை ஓடைகள், சாக்கடைகளில் வெளியேற்றி வருகிறது. கடந்த மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் 51 அனுமதியில்லாத சாயப்பட்டறைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டன. தற்போது, அனுமதி இல்லாத சாயப்பட்டறைகளின் செயல்பாடுகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சுத்திகரிப்பு நிலையம் இல்லாத இந்த சாயப்பட்டறைகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்திட முடியவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், திருச்செங்கோடு கோட்டாச்சியர் மணிராஜ், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள், பறக்கும்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாடகைக்கு ஆசைப்பட்டு நிலத்தின் உரிமையாளர்கள் சாயப்பட்டறை நடத்திட இடம் அளிப்பதால்தான், அனுமதி இல்லாத சாயப்பட்டறைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. சாயப்பட்டறை நடத்திட இடம் கொடுக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சாயப்பட்டறைகள் மட்டும் இடித்து உடைத்து அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. இனி நிலத்தின் உரிமையாளர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் தயாராகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் அனுமதி இல்லாமல் இயங்கும் சாயப்பட்டறைகள் குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து கணக்கெடுத்து வருகின்றனர். பட்டியல் தயாரானதும் நிலத்தின் உரிமையாளர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் நடவடிக்கை இருக்குமென தெரிகிறது.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி